Image via தேவ Thasan

The Legacy of Dominic Jeeva (டொமினிக் ஜீவா விட்டுச் செல்லும் மரபு) Tamil version

This article was translated by Hasanah Cegu Isadeen. Read the English version here.

“துப்பாக்கி நிழலில் சாதியம் மறைந்திருக்கிறது. மரித்துவிடவில்லை.”

-டொமினிக் ஜீவா

மல்லிகை ஜீவா என்று பிரபல்யமாக அறியப்பட்ட டொமினிக் ஜீவா, இலங்கையின் தமிழ் இலக்கியத்தில் ‘முற்போக்கு இலக்கியம்’ என அறியப்பட்ட இடதுசாரிய பாரம்பரியத்தில் வந்த மிகவும் நேசிக்கப்பட்ட, சாதியத்திற்கு எதிரான செயற்பாட்டாளரும், தீரமிக்க நபருமாவார். பாரிய ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகின்ற பஞ்சமர் எனக் கூட்டாக அறியப்படுகின்ற,  ஐந்து சாதிய-சமூகக் குழுக்களுள் ஒன்றில் பிறந்த டொமினிக் ஜீவா சாதிய அடிப்படையிலான வன்முறையினையும், துஸ்பிரயோகத்தினையும் பற்றித் துல்லியமான விழிப்புணர்வுடன் வளர்ந்தார்.

டொமினிக் ஜீவா பிறந்த காலத்தில்தான், பஞ்சமர்கள் மீது வன்முறையாகத் திணிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராகப் போராடவென ‘ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்’ (Forum for Depressed Class Tamil Labourers) உருவாக்கப்பட்டது. பாடசாலைகளில் ஏனைய சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் வாங்குகளில் அமர்ந்திருக்க, பஞ்சமர்களுடைய பிள்ளைகள் வேறாக்கப்பட்டு நிலத்தில் இருத்தியே கல்விகற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறான சாதிய பாரபட்சத்திற்கு எதிராக போராடிய ‘ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம்’ ஆதிக்க சாதியினரின் தடைகளையும் மீறி பஞ்சமர்-சமூகப் பிள்ளைகளும் சமமாக அமர்ந்து கல்வி கற்பதற்காக போராடி அதில் வெற்றியும்  கண்டனர்.. இதனால் ஆத்திரம் கொண்ட ஒடுக்குமுறைச் சாதியினர் பஞ்சம சமூகத்து பிள்ளைகளை வாங்கில் இருந்து கல்வி கற்க அனுமதித்த பதின்மூன்று பாடசாலைகளை எரித்துச் சாம்பலாக்கினார்கள்.

யாழ்ப்பாணப் பழைமைவாதத் தமிழ் சமூகத்தின் சாதியப் பாராபட்சத்தின் நிலை அதிகரித்துச்  செல்வதை உணர்ந்து கொண்டவர் டொமினிக் ஜீவா. ஆதலால் பஞ்சமர்களுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி  எழுதவாரம்பித்தார். அதுமட்டுமன்றி  இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் இணைந்து  தேநீர்க் கடைப் பிரவேசப் போராட்டம், மற்றும் ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் (The Teashop Entry Movement and The Temple Entry Movement) இணைந்து செயல்பட்டார். சிறுபான்மை தமிழர் மகாசபையானது ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான உரிமைகளுக்காகவும், பஞ்சமர்களுக்கு எதிரான தடைகளை எதிர்த்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டது. 1968ஆம் ஆண்டில், பிரபலமான மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் ஆதிக்க வெள்ளாள அரசியல்வாதியும், தமிழ் தேசியவாதியுமான சி.சுந்தரலிங்கம், பிரதான எதிர்ப்பாளராக இருந்துள்ளார். ஆலயத்திற்குள் பிரவேசிக்க முயன்ற பஞ்சமர்களை கம்புகளால் தாக்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான வெள்ளாளர்களைக் கொண்ட கும்பலை வழிநடாத்திக் கொண்டிருந்தவரும் சி.சுந்தரலிங்கம் என்பதாகவே அறியமுடிகிறது. அந்த  சி.சுந்தரலிங்கத்தினை டொமினிக் ஜீவா நெஞ்சுரம் கொண்டு எதிர்த்து நின்றார்.

மேலும் டொமினிக் ஜீவா எழுத்தை தனது ஆயுதமாக்கினார். 1950களில் ஆரம்பித்த அவரது எழுத்து, தமிழ் சமூகத்தில் முறைப்படுத்தப்பட்டு ஆழமாகப் புரையோடிப்போயிருந்த சாதியத்தை வெளிப்படுத்தியது. இதன் விளைவாக அவருக்குக் கிடைத்த அங்கீகாரமும், புகழும் பஞ்சமர்களது வாழ்வியல் அனுபவங்களை, போராட்டங்களை, மற்றும் அபிலாஷைகளை தனது எழுத்தாற்றலால் ஆவணப்படுத்தவும் வழியமைத்துக் கொடுத்தது. 1986ஆம் ஆண்டு ‘மல்லிகைப்பந்தல்’ வெளியீட்டகத்தினை நிறுவியர் என்ற வகையிலும், 55ஆவது ஆண்டிலிருக்கும் ‘மல்லிகை’ இலக்கிய சஞ்சிகையினை செப்பனிட்டவர் என்ற வகையிலும் இவர் அறியப்படுகிறார். முதன் முதலாக இடதுசாரிய கருத்தியலைக் கொண்ட சிங்கள இலக்கியத்தினை மொழிபெயர்ப்புச் செய்து தமிழ் வாசகர்களுக்கிடையே உரையாடலுக்கான தளம் அமைத்துக் கொடுத்ததாகவும்  டொமினிக் ஜீவாவினது மல்லிகை சஞ்சிகை அறியப்படுகிறது.

வரலாறு நமக்கு எதனைக் கற்றுத் தருகிறது

ஏறத்தாள ஒரு நூற்றாண்டாக வீரியத்துடன் முன்நகர்ந்த டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை அனுபவத்தை  நாம் அறிகின்றோம்.  அதேவேளை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் பஞ்சமர்களதும், (தலித்துக்கள்)  மற்றும் குறிப்பாக, தலித் பெண்கள், திருநர்கள் மீதும்; பல்வகையான சமூக-வன்முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடரும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு  முகங்கொடுக்க நேரிடுகின்ற சூழலில், அவர்களுக்கான விடுதலையினை அடைந்து கொள்ள  வரலாறு நமக்கு எதனைக் கற்றுத் தருகிறது என கேட்கத் தூண்டுகிறது.

டொமினிக் ஜீவா, கே.டேனியல், தெணியான்,  என்.கே.ரகுநாதன், நந்தினி சேவையர் போன்ற பல தலித் படைப்பாளிகள் சாதிய சமூக அவலங்களைச் சித்தரிக்கும் இலக்கியப் படைப்புகளை நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் எழுதியுள்ளார்கள். அதுமட்டும் அல்லாது தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தவர்களான வெகுஜனன் (சி.கா.செந்தில்வேல்) இராவணன் (ந.ரவீந்திரன்) இருவரால் எழுதப்பட்டது ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ எனும் நூல். அது ஒரு வரலாற்று ஆவணம்.  இடைக்காட்டார் என்பவர் 1925ல்; எழுதிய ‘நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்’ எனும் ஒரு நாவலும் வெளிவந்ததாக அறியமுடிகிறது.  தொடர்ந்தும் வட-கிழக்கில் நிலவும் சாதிய முரண்பாடுகளை இவ்வாறான இலக்கிய வரலாற்றுப் படைப்பிலக்கிய பிரக்ஞையூடாக இல்லாதொழித்திடும் வாய்ப்பு நிகழுமா...?

வடக்கு கிழக்கு தொழிலாளர்கள் சங்கத்தின் ஊடாக சாதியத்திற்கு எதிரான மிகவும் துணிச்சலான இயக்கமொன்று 1910இல் ஆரம்பித்தது. இது வட்டுக்கோட்டை கல்லூரியில் முதலாவது தலித் மாணவர் ஜேகொப் காந்தி நுழைவதற்கான போராட்டமாகும். சாதியத்திற்கு எதிரான இயக்கங்களினது கடினமானதும், தந்திரோபாயம் கொண்டதுமான போராட்டங்களது விளைவின் காரணமாகவே  பஞ்சமர் சமூகங்களுக்கு எதிரான பகட்டான வெறித்தனமான தடைகளைக் குறைக்க முடிந்தது.

டொமினிக் ஜீவாவும், சிறுபான்மை தமிழர் மகாசபையினரும்; (தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உட்பட) ஏனைய ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் சக்திகளுடன் சேர்ந்து கொள்ளவும், அவர்களுக்கிடையிலான கூட்டிணைவைக் கட்டியெழுப்பவும் முன்நின்று செயற்பட்டனர். இதன் விளைவாக, முதன் முதலில் யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களுடைய தேநீர்க் கடைகள் பஞ்சமர்களை உட்பிரவேசிக்க அனுமதித்தன. மேலும் சி.சுந்தரலிங்கம் கொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசியதுடன், சாதி மற்றும் இனங்களைக் கடந்து தொழிலாளர் வர்க்கத்துடன் கூட்டிணைவுகளை உருவாக்க, டொமினிக் ஜீவா இடையறாது பணியாற்றி வந்தார். ஆலயப்பிரவேசத்திற்கான   உண்ணாவிரதப் போராட்டங்களிலும்,  அதையொட்டிய எதிர்ப்பு ஊர்வலங்களில் பல்வேறு தரப்பினரும் பங்குபற்றியிருந்தனர். சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களோடு பிற முற்போக்கு சக்திகளும் இணைந்த போராட்டமாக நிகழ்ந்திருக்கிறது. அவை பரந்தளவில் மக்களிடையே நீதிக்கான உணர்வையும், புரட்சியையும் தூண்டியிருந்தது.

அதேநேரம் இலங்கை அரசியல் அதிகாரப் பின்புலத்தில் அதிகரித்து வந்த சிங்கள பௌத்த தேசியவாதம், தொடர் தமிழர் எதிர்ப்பு படுகொலைகளையும், இனவாத கொள்கைகளையும் வளர்த்து வந்தது. இவ்வாறான இன முரண்பாட்டிற்கு மத்தியில் மேலே கூறப்பட்ட கூட்டிணைவுகளது முன்னேற்றமும், நிலைபேண் தன்மையும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தமிழ் மக்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் வன்முறைக்கெதிராகப் போராட தமிழ் தேசியவாதத்தின் கீழ் ஒன்றுபட்டபோது, பஞ்சமர்கள், (தலித்துகள்) மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலை மீதான  கரிசனைகள் புறக்கணிக்கப்பட்டு தமிழ் தேசியவாதத் திரையினால் மூடிமறைக்கப்பட்டிருந்ததாகவும் பலர் கருதுகின்றனர்.  அதேநேரத்தில் டொமினிக் ஜீவா போன்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட இடதுசாரிகளில் சிலர் தமிழ் தேசியவாதப் போராட்டத்தில் இணைந்து புரட்சிகர மாற்றத்திற்காக செயல்பட்டனர் எனவும்  என சிலர் வாதிடுகின்றனர்.

போராட்டத்தின் பெயரில் பாதிப்பிற்குள்ளானவர்கள்

‘தமிழர் விடுதலைப் போராட்டத்தில்’ கடந்த 30 வருடங்களில் இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பஞ்சமர்களும், மலையகத் தமிழர்களுமாவர். தமிழர்கள் மத்தியில் யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் அதிகளவில் இடப்பெயர்விற்குள்ளானவர்களில் கணிசமானவர்களும் இவர்களே.  ‘அடக்குமுறைக்குள்ளாக்கும்’ சாதியக் குழுக்கள் தமது பொருளாதார செல்வாக்கினைப் பிரயோகித்து தடுப்பு முகாம்களிலிருந்தும், நாட்டிலிருந்து வெளியேறிவிட, வாய்ப்புகள் வசதிகளற்ற பஞ்சமர்களும், மலையகத் தமிழர்களுமே போராட்டம் முடிவுற்றபோதும் அதன் வலிகளை-வடுக்களை சுமந்து வாழ்பவர்களாக உள்ளனர்.

பாலியல்ரீதியான வன்முறை, உழைப்புச் சுரண்டல், கடன் தொல்லைகள், குடிநீர் அள்ளுவதற்கான தடைகள், பதிவி உயர்வு போன்ற சம்பவங்கள் சாதியரீதியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராம உட்கட்டமைப்பு வசதிகள்;  (வடிகாலமைப்புக்கான வசதிகள், மின்சார வசதிகள், வீதிப் புனரமைப்பு போன்றவை) மற்றும் காணி உரிமையற்ற நிலை என்பன பஞ்சமர்களும், மலையக  மக்களும் இன்றுவரையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சினைகளாக உள்ளது. குறிப்பாக தலித்துக்கள்; மற்றும் தலித்திய பெண்களும், திருநர்களும் இப்பிரச்சினைகளால் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இலங்கை அரசாங்கமும், பொது மைய ஊடகங்களும் சாதியப் பிரச்சினைகளைக் கண்காணிப்பதில்லை என்பதுடன்  இந்தியாவில் இருப்பது போன்று ஒதுக்கீட்டுத் திட்டங்களும் அமுலில் இல்லை. சாதியப் பாகுபாடுகள் மீதான அரசின் அலட்சியப்போக்கிற்கு   நிகராகவே  தேசியவாதக் கண்ணோட்டம் கொண்ட தமிழ், சிங்கள அரசியல்வாதிகளும் இணைந்துகொள்கின்றனர். இவ்வாறான நிலைமையானது சமூக மாற்றத்தினை மட்டுப்படுத்தும் உள்ளார்ந்த காரணியாகத் தொடரும் நிலை நீடிக்கவே செய்யும்.

தமிழ் தேசியவாதப் போக்கிற்கு பல பஞ்சமர்கள் ஆதரவளித்தமை ஒரு புறம் இருக்க, தேசியவாதம் உருவானதில் இருந்து இன்று வரையும் தேசியவாதக் கருத்தியல் அதிகாரமானது வெள்ளாளர்களது கைகளில்தான் இருந்து வருகிறது. அது பிரிவினைகளுக்கு அப்பால் தமிழர்களை ஒன்று திரட்டும் அரசியல் உறுதிப்பாட்டைக் கோரி நிற்கின்றதாயினும், அரசியல் பிரதிநிதிகளாக தலித் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளை மிக அபூர்வமாகவே தமிழ் தேசியவாதக் கட்சிகளில்  காண முடிகிறது.

1970களின் இறுதிகளில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் தமிழ் தேசிய விடுதலை இயக்கமும் அதனது ஏகோபித்த அதிகாரமும் மேலோங்கியிருந்தது. அதன் காரணமாக அதுவரைகாலமாக செயல்பட்டுவந்த ஜனநாயக அமைப்புகளும், சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக சுதந்திரமாகப் போராடி வந்த அமைப்புகளும் மௌனிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. தற்போது அந்நிலையில் மாற்றம் தெரிவதுடன்சாதியம் குறித்தும் அதன் ஒடுக்கு முறைகள் குறித்தும் உரையாடுவதற்கான வழிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன.

ஒன்றுபடல் மற்றும் ஒருங்கிணைவு என்பது போலியானது என்பதிலுள்ள உண்மைத்தன்மையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவை?

டொமினிக் ஜீவாவினது வாழ்வியலாலும், சமூக-விழுமியங்களாலும் நிரப்பப்படுகையில் எதிர்காலத்திற்கான நம்பிக்கை எழுகிறது. சாதியை இல்லாதொழிக்கும் இயக்கம் தொடர்கின்ற அதேவேளை,  சாதிய அடிப்படையிலான வன்முறை மற்றும் அடக்குமுறைகள் அற்ற பன்மைத்துவம் கொண்ட ஒரு இலங்கையை நோக்கி நாம் நகர்கையில் டொமினிக் ஜீவாவினது பங்களிப்புகளைப்  புரிந்துகொள்வோம்.

இக்கட்டுரை இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தகவல்களை பெரிதும் உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.